Ramnadinfo

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

E-mail Print PDF

ராமநாதபுரம், ஜூன் 11:

ரூ.616 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் இந்த திட்டம் ரூ.616 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, சிவகங்கை ஆகிய 5 நகராட்சிகளுக்கும், 11 பேரூராட்சிகளுக்கும், 18 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் குடிநீர் கிடைக்கும்.

இந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி சென்னையில் இருந்தவாறு மின் ஊடக தொலைத் தொடர்பு (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக தொடங்கி வைத்தார். ராமநாதபுரத்தில் நடந்த தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இத் திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது: 1989 ஆம் ஆண்டு நீலகிரியில் மலர் கண்காட்சியை திறந்து வைக்க சென்றபோது, வறண்டு கிடந்த ராமநாதபுரம் மாவட்டத்தை எண்ணி கவலைப்பட்டேன். அதன் விளைவாக இந்த திட்டம் உருவானது. கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.616 கோடி மதிப்பீட்டில் 30.01.2007 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டே ஆண்டுகளில் இந்த திட்டம் வேகமாக முடிக்கப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த திட்டத்தை விரிவாக செயல் படுத்திய துணை முதலமைச்சரை பாராட்டி வாழ்த்துகிறேன்.

 

நீண்ட கால கனவான இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது போல, 150 ஆண்டுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வந்த சேது சமுத்திர திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும். ரூ. 2427 கோடிமதிப்பீட்டில் டி.ஆர்.பாலு முயற்சியால் ஏறத்தாழ 60 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில் சிலரது சூழ்ச்சியால் தடைபட்டுள்ள சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற புதிய மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

சேது சமுத்திர திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் உள்பட தென் தமிழகம் முழுவதும் தொழில்கள் வளர்ச்சி பெறும்; வேலை வாய்ப்பு பெருகும். மக்கள் வாழ்க்கை முன்னேற்றமடையும். எனவே இந்த திட்டத்தை மத்திய அரசின் துணையோடு விரைவில் நிறைவேற்றி முடிப்போம். திமுக ஆட்சி மக்கள் பிரச்சனை களில் கவலை கொண்டு அவற்றை உடனடியாக செயல்படுத்தி வருகிறது. ராமநாதபுரத்தை செழிப்பும், வளமும் அடைய செய்ய அனைவரும் சூளுரை ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவுக்கு தலைமை வகித்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை விரைந்து முடிக்க உதவிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும்,இதன் மூலம் கிடைக்கும் குடிதண்ணீரை வீணாக்காமல் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்தின் 2வது கட்டமும் நிறைவேற்றப்பட்டு மேலும் பல ஊர்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

Last Updated on Thursday, 11 June 2009 16:22  

Who's Online

We have 12 guests online

Search